ஒன்பதே மாதங்களில் ஐம்பது புத்தகங்களை வாசிக்க முடிந்தது எவ்வாறு?
🖋ஆங்கில பன்நூலாசிரியர் அஷ்ஷெய்க் இஸ்மாயில் கம்தார்
விரிவுரையாளர், இஸ்லாமிய ஒன்லைன் பல்கலைக்கழகம்.
தமிழில், அஷ்ஷெய்க் எம் எம் ரிஸ்வான் (மீஸானி)
இந்த வருடத்தை விட அடுத்த வருடம் அதிகூடிய நூற்களை வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை கடந்த சில ஆண்டுகளாக நான் இலக்காகக் கொண்டிருந்தேன். வருடாந்தம் நான் வாசித்த தரமான புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பெற்ற அறிவின் அளவினையும் மேம்படுத்த முடிந்தது.
தினமும் வாசிப்பில் ஈடுபடல் என்பது அனைவராலும் கைக்கொள்ளப்பட வேண்டியதொரு நல்ல பழக்கமாகுமென்று மக்களை இதன் பால் ஊக்கப்படுத்தி வருகின்றேன். இதனை வெறுமனே, ஒரு பிரச்சாரமாக அல்லாமல் எனது வாழ்வில் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று எத்தனிக்கும் ஓர் உண்ணத விடயமாகவே நோக்குகின்றேன்.
கடந்த ஆண்டுகளில், 20 – 40 வரையிலான புத்தகங்களை வருடாந்தம் வாசித்திருக்கின்றேன். இந்த வருடம் ஐம்பது புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். அல்ஹம்துலில்லாஹ்
ஒரு வருடமாவதற்குள் 51 புத்தகங்களை வாசித்து முடித்ததோடு, இன்னும் ஏழு புத்தகங்களை வாசித்து முடிக்கும் நிலையில் இருக்கின்றேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உண்மையில், வாசிப்புத்துறையில் எனது இந்த அடைவானது மெச்சத்தக்கதொன்றல்ல. ஏனெனில், எனது சில ஆசிரியர்கள் வருடாந்தம் 100 ற்கும் அதிகமான புத்தகங்களை வாசித்திருக்கின்றனர். ஆனால் இவர்களோ சேவையிலிருந்து இளைப்பாறிய நிலையில் அதிக ஓய்வு நேரங்களை கைவசம் கொண்டிருந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் , பல்கலைக்கழக தொழிலில் இருந்துகொண்டு, தனி நிறுவனப் பணியாளராக, எழுத்தாளராக, வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு ஆசிரியராக என்றெல்லாம் பல்வேறுபட்ட வேலைப் பளுக்கலுக்கு மத்தியில், வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதில் அடைந்த முன்னேற்றம் குறித்து நான் ஓரளவு மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த சில நாட்களாக, அதிகளவில் வினவப்படும் கேள்வியாக இருப்பது ” இவ்வருடம் இவ்வளவு அதிகமான புத்தகங்களை எப்படி வாசித்து முடித்தீர்கள்? ” என்பதாகும்.
இதற்கான பதில் ஓரளவு நீண்டதாக இருப்பதனால் இது தொடர்பானதொரு பதிவை எழுதத் தீர்மானித்தேன்.
இவ்விலக்கை அடைவதற்கு பின் வரும் ஆறு முக்கிய நடவடிக்கைகள் எனக்கு துணைநின்றன.
1- வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் பட்டியலொன்றினை வைத்துக்கொள்ளல்.
குறித்த வருடத்தினுள் அடுத்தடுத்து என்னென்ன புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்ற தெளிவில்லாத நிலையில் வாசிப்பில் ஈடுபடுவதானது வாசிப்பில் எட்டப்பட வேண்டிய இலக்கை அடைய முடியாமலேயே போகும் என்பதை உறுதிகொள்ளல் வேண்டும்.
நான் அடிக்கடி புத்தகப் பட்டியலில் புதிய புத்தகங்களை இணைத்துக் கொண்டே இருப்பேன். வாசிக்கின்ற ஒவ்வொரு புத்தகங்களினதும் தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள இணையத்தில் இயங்கி வரும் ” இணயதள வாசகர் வட்டம் ” என்ற பகுதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தற்போது நான் வாசித்துக் கொண்டிருப்பதோடு, எதிர் காலத்தில் வாசிக்க வேண்டியதையும் திட்டமிட்டிருக்கின்றேன். வாசிப்புத் துறையில் வருடாந்த இலக்கு நோக்கிய எனது முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கும் இதனை நான் பயன்படுத்துகின்றேன்.
படிப்பதற்கு ஆர்வமுள்ளதொரு புத்தகத்தை காணும் போதெல்லாம், அதனை எனது புத்தகப் பட்டியலில் சேர்த்துக்கொள்வேன்.
ஒரு தொகுதி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் ஏக காலத்தில் அடுத்து வாசிக்கத் திட்டமிட்டிருக்கும் புத்தகங்களை மேற் குறித்த முறைமையினூடாக எப்போதுமே தெரிந்து கொள்ள முடியும்.
பரிந்துரை ;
“இணையத்தள வாசகர் வட்டம் ” பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கிய தொகுப்பொன்றைப் பயன்படுத்தி உங்களுடைய முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2- ஏக காலத்தில் பல புத்தகங்களை வாசித்தல்.
ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே புத்தகத்தை மாத்திரம் கருத்தூன்றி நான் வாசிப்பதில்லை.
இது சிலபோது சடைவை ஏற்படுத்த முடியும். விஷேடமாக, ஒரு நாளில் பல மணி நேரங்கள் வாசித்தாலோ அல்லது புத்தகம் பெரியதாக இருந்தாலோ இது இன்னும் அலுப்புத் தட்டக்கூடியதாக மாறிவிடும்.
பதிலுக்கு ஏக காலத்தில் பல புத்தகங்களை வாசிப்பதில் கவனம் செலுத்தும் போது இச்சோர்வு நிலை இருக்காது.
ஒரு புத்தகத்தின் மீதான கவனமும் ஈர்ப்பும் குறைவடைகின்ற போது, அதனை மூடிவிட்டு மற்றுமொரு புத்தகத்தை வாசித்தால் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.
ஒரே நேரத்தில், பல்வகைப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 5 – 7 புத்தகங்களை என்னால் வாசித்து முடிப்பதற்கு இயலுமாக அமைந்து விடுகிறது.
பரிந்துரை ;
ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது பயனுள்ள பல நல்லவிளைவுகளை ஏற்படுத்தும்.
3- ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணித்தியாலங்கள் வாசிப்பில் ஈடுபடல்.
நாளைக்கு அரை மணி நேரத்தை அர்ப்பணித்த நிலையில், பல வருடங்களுக்கு முன்னர் எனது வாசிப்பு பழக்கத்தை நான் ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு வருடமும் அரை மணி நேரம் என்ற வீதத்தில் இதற்கான நேர அதிகரிப்பினை செய்து வந்தேன்.
இந்த வகையில் தற்போது நிறைந்த வேலைப் பளுகலுக்கு மத்தியிலும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணித்தியாலங்கள் வாசிப்பில் ஈடுபட்டு வருகின்றேன். இதன் விளைவாக, மாதாந்தம் பல புத்தகங்களை நாள் தோறும் அதிக நேரங்களை ஒதுக்கி வாசிக்க முடியுமாக இருக்கிறது.
பரிந்துரை ;
இது வரை உங்களிடம் வாசிப்புப் பழக்கம் அறவே இல்லையெனில், தினமும் அரை மணி நேரத்தை ஒதுக்கி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் வாசிப்பு பழக்கத்திற்கு பழக்கப்பட்டவுடன் சிறுகச் சிறுக இதற்காக ஒதுக்கப்படும் நேரத்தின் அளவினை கூட்டிக் கொள்ளுங்கள்.
4- சிறிய,பெரிய புத்தகங்கள் என்று கலந்த நிலையில் இரண்டையும் மாறி மாறி வாசித்தல்.
வாசிப்பில் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு தடையாக அமைவது, விரிவானதொரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அலுப்புத்தட்டும் வரை அதையே வாசித்து கொண்டிருத்தலாகும்.
இவ்வாறானதொரு நிலையில் எனது அணுகுமுறை யாதெனில், சிறியதும் பெரியதும் என்ற இரண்டு வகையான புத்தகங்களையும் ஒரே நேரத்தில் கலந்து வாசிப்பதாகும். இந்த வகையில், பெரியதொரு புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கு மூன்று மாதங்கள் எடுத்தாலும் கூட, அந்த காலப் பகுதியில் சிறியளவிலான வேறு 10 புத்தகங்களை இம்முறைமையினூடாக என்னால் வாசித்து முடித்து விடலாம்.
உதாரணமாக, முதலீடு மற்றும் நிதி தொடர்பாக “ரே டேலியோ” என்பவரால் ” அடிப்படைக் கோட்பாடுகள் ” எனும் பெயரில் எழுதப்பட்ட நூல். பெப்ரவரி மாதத்தில் வாசிக்க ஆரம்பித்த இந்நூலினை மே மாதத்தில் நிறைவு செய்துவிட்டேன். இந்த காலப் பகுதியில் ஒரு மணித்தியாலம் இப்புத்தகத்தையும் மற்றுமொரு மணித்தியாலம் சிறியளவிலான வேறொரு புத்தகத்தையும் வாசித்தேன்.
இதன் விளைவாக, இம்மூன்று மாத காலத்தில் மாத்திரம் 12 புத்தகங்களை வாசித்து முடித்தேன்.
பரிந்துரை ;
நீண்டதொரு புத்தகத்தை மாத்திரம் வாசித்து கொண்டிருக்காமால், கூடவே அதனோடு இணைத்து சிறிய புத்தகங்களையும் வாசியுங்கள். இவ்வாறு செய்தால், சடைவின்றி உங்களது இலக்குகளை அடைந்து கொள்ள முடியும்.
5- தேவையின் நிமித்தம் துரித வாசிப்பில் ஈடுபடல்.
துரித வாசிப்பு முறையினை நான் தெரிவு செய்வதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு;
1) ஏலவே, எனக்குப் பரீச்சயமான தலைப்புக் குறித்து வாசித்தல்.
2) பல வருடங்களுக்கு முன்னர் நான் வாசித்த பழைய புத்தகங்களை வாசித்தல்.
ஒரே தலைப்புக் குறித்து பல புத்தகங்களில் கலந்துரையாடப்படுவதுண்டு.
இந்நிலையில், ஒரு தலைப்பினை நன்கு கற்றுக் கொள்ள வேண்டி ஏற்படின், குறித்த தலைப்பினை குறைந்தது 10 புத்தகங்களில் படிப்பது எனது வழமையான செயற்பாடாகும்.
இதன் போது, முதல் ஓரிரு புத்தகங்களை மெதுவாகவும் ஏனையவற்றை வேகமாகவும் வாசிப்பேன். இதன் விளைவாக, ஏற்கனவே வாசிக்கப்பட்ட விடங்களை மெதுவாக வாசித்து நேரத்தை வீணடிக்காமல் வேறு அதிக விடயங்கள் குறித்து விரைவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகின்றது.
முன்னர் வாசித்த விடயங்களை மீள நினைவுக்குக் கொண்டு வருவதற்கும் அவை தொடர்பான புதிய கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பல வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகங்களை மீள் வாசிப்புச் செய்வேன்.
எமது சிந்தனை, அறிவு, அனுபவம் என்பன காலவோட்டத்தில் வளர்ச்சி காண்கின்றன.
புதிய நோக்கு மற்றும் புதிய பார்வையுடன் பழைய கருத்துக்களை இன்னும் சிறப்பாக விளங்கிக் கொள்ளும் நோக்குடன் பழைய புத்தகங்களை மீளவும் வாசிப்பதற்கு இவ்வணுகு முறையானது பெரிதும் துணை நிற்கும்.
பரிந்துரை ;
ஒரு புத்தகத்தினது உள்ளடக்கம் உங்களுக்கு பரீச்சயமானதாக இருந்தால், அதனை வேகமாக வாசித்துவிட நீங்கள் முயற்சிசெய்யுங்கள். குறித்ததொரு புத்தகத்தினை பல வருடங்களுக்கு முன்னர் வாசித்தும் அதிலுள்ள விடயங்களை புரிந்து கொள்ள முடியாமல் போயிருப்பின் மீளவும் அவைகளை இப்போது வாசியுங்கள். அப்போது, அவற்றை இவ்வளவு சிறப்பாக விளங்கிக் கொள்ள முடியுமாக உள்ளதே என்பதையிட்டு நீங்களே வியந்து போவீர்கள்.
6- வாசிப்பை அடிப்படையாகக் கொண்ட தொழிற் துறைகளைத் தெரிவு செய்தல்.
ஆரம்பமாக, பல்கலைக்கழக கற்பித்தல், முகாமைசெய்தல்,தொழில் நோக்கில் எழுதுதல் போன்ற மூன்று வழிமுறைகளுக்கூடாகவே சம்பாதித்து வந்தேன்.
இம்மூன்று தொழில்களுக்கும் பரந்துபட்ட வாசிப்பும் ஆய்வும் இன்றியமையாதவை. இதனால், தொழிலில் இருந்து கொண்டே வாசிப்பதற்கான சலுகையை நான் பெற்றுக் கொண்டது மட்டுமல்ல, அதற்காக பணமும் வழங்கப்பட்டேன்.
புத்தகம் அல்லது கட்டுரை எழுதுவதற்கு முன்னர் வாசித்துவிட்டு எழுத வேண்டுமென்பதற்காக புத்தகப் பட்டியல் ஒன்றை வாடிக்கையாளர்கள் என்னிடம் தருவார்கள். இவைகளை வாசிப்பதற்காக சொற்கள் மற்றும் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் பணம் செலுத்துவார்கள்.
எனது துறையில் புதிய புதிய விடயங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமென பல்கலைக்கழகம் என்னிடம் எதிர்பார்க்கும். எனவே, நான் விரிவுரை நிகழ்த்தும் பாடங்கள் தொடர்பான புத்தகங்களை அலுவலக நேரங்களில் வாசிப்பதை தொழிலின் ஒரு பகுதியாகவே கருதப்படும்
நான் எழுதிய எனது சொந்தப் புத்தகங்களைப் பொறுத்தவரை,எழுதுவதற்கு முன்னர் பலமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது. ஆகவே, எனது எழுத்துத் துறை செயற்பாட்டின் பெரும் பகுதி பரந்துபட்ட வாசிப்பில் தான் தங்கியிருந்தது.
பரிந்துரை ;
உங்களது வாழ்வின் பெரும் பகுதியை உண்மையாக நீங்கள் வாசிப்பு துறையில் செலவிட விரும்பினால், அதிகளவிலான வாசிப்பையும் ஆய்வுசெய்தலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற் துறையை தெரிவு செய்யுங்கள்.
இவ்வாறே இந்த ஆறு வகையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தியதனால் தான்,வருடாந்தம் அதிகளவிலான புத்தகங்களை வாசிக்க முடிந்தது.
“ஒன்பதே மாதங்களில் ஐம்பது புத்தகங்களை வாசிக்க முடிந்தது எவ்வாறு?” என்ற கேள்விக்கு போதுமான விடை கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன்.